135 நகரங்களுக்கு தயாராகுது முழுமை திட்டம்; அடிப்படை வசதி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு
135 நகரங்களுக்கு தயாராகுது முழுமை திட்டம்; அடிப்படை வசதி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு
ADDED : ஆக 19, 2024 06:58 AM
சிறிய நகராட்சிகளில், தொகுப்பு முறையில் கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் வகையில், 135 நகரங்களுக்கு புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு நகரத்தில் அடுத்த, 20 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சியை மதிப்பிட்டு, அதற்கான முழுமை திட்டம் தயாரிக்கப்படும். அப்போது, நகரின் பொருளாதாரம், வீட்டுவசதி, போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள் போன்றவையும் கவனத்தில் கொள்ளப்படும்.
தமிழகத்தில், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், 7 சதவீத நிலப்பகுதிகளுக்கு மட்டுமே முழுமை திட்டம் உள்ளது. இந்த பரப்பளவை, 22 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாநகராட்சிகள், நகராட்சியாக உள்ள சிறு நகரங்களுக்கு முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டு, இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜி.ஐ.எஸ்., எனப்படும், புவிசார் தகவல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில், புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், ஒவ்வொரு நகரம் குறித்த துல்லியமான விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசின் அம்ரித் திட்டத்தின் இரண்டு கட்டங்களில், 72 நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் தயாராகி வருகின்றன.
தமிழக அரசின் முயற்சியில் மூன்று கட்டங்களில், 56 நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர, ஏழு நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன. ஆக மொத்தம், 135 நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் தயாராகின்றன.
இதில், குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகள், நகராட்சிகளுக்கு சவாலாக உள்ளன. ஒவ்வொரு நகராட்சிக்கும், இதற்காக தனித்தனி திட்டங்களை செயல்படுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட சிறு நகராட்சிகளுக்கு, தொகுப்பு முறையில் இணைந்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் வகையில், முழுமை திட்டங்களில் வழிவகை செய்யப்படும். இதனால், சிறு நகரங்களில் அடிப்படை வசதி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -