ADDED : ஜூன் 09, 2024 03:08 AM

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சீமைக் கருவேல மரங்கள், உண்ணிச் செடிகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அதில், போத்தமடை வனச்சுற்று பகுதி, சர்க்கார் பகுதி என மொத்தம் 400 ஏக்கரில் கருவேல மரங்கள், உண்ணிச் செடிகள் அகற்றப்பட்டன. இப்பகுதியில், கோவை விமானப்படையினருடன், வனத்துறை இணைந்து, 14 லட்சம் விதை பந்துகள் துாவும் பணி நேற்று துவங்கியது.
சேத்துமடை வனத்துறையின் விளக்க மையத்தில் விதை பந்து துாவும் பயிற்சி முகாம் நடந்தது. தொடர்ந்து, போத்தமடை பீட்டில் விமானப் படை பிரிவு, அரசு மற்றும் தனியார் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள், வனத்துறையினர் என, 300 பேர் விதை பந்துகளை துாவும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியை ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், விமானப் படை கமாண்டிங் ஆபீசர் பெர்குணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மேலும், ஹெலிகாப்டர் வாயிலாக விதை பந்துகளை துாவ திட்டமிட்டுள்ளதாகவும் விமான படையினர் தெரிவித்தனர்.

