கான்கிரீட் வீடுகளாக மாறும் குடிசைகள் முதல்கட்டமாக 15 மாவட்டங்கள் தேர்வு
கான்கிரீட் வீடுகளாக மாறும் குடிசைகள் முதல்கட்டமாக 15 மாவட்டங்கள் தேர்வு
ADDED : ஜூலை 10, 2024 01:11 AM
சென்னை:'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, 15 மாவட்டங்களை குடிசைகள் இல்லாத மாவட்டங்களாக மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் எட்டு லட்சம் குடிசை வீடுகளில், மக்கள் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 'ஒரு லட்சம் புதிய வீடுகள் தலா 3.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அரசாணை
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகளை, 3,100 கோடி ரூபாயில் கட்ட, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத திட்டம் ஆகியவற்றின் கீழ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில், 'பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை முடித்து, வரும் 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை துவக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
திட்டத்தின்படி, 'குடிசைகளில் வசிப்போர், கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் மறு சர்வே பட்டியலில் தகுதியானவர்கள் ஆகியோரை, பயனாளிகளாக சேர்க்க வேண்டும்.
பயனாளிக்கு சொந்தமான நிலம், பட்டா இருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட இயலாது' என, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
தலா 4,000 வீடுகள்
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், பெரம்பலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், குடிசைகளின் எண்ணிக்கை குறைவு என தெரியவந்ததால், அதற்கு ஏற்ப வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.
மற்ற மாவட்டங்களுக்கு தலா 3,000 வீடுகள் முதல் 4,000 வீடுகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. குடிசைகள் குறைவாக உள்ள மாவட்டங்களில், பயனாளிகள் தேர்வுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, மண் சுவரில் தகர 'ஷீட்' வேய்ந்த வீடுகள், முற்றிலும் தகர ஷீட் வேய்ந்த வீடுகளில் வசிப்பவர்களை பயனாளிகளாக சேர்க்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.