துங்கபத்ரா ஷட்டர் உடைப்பால் 15 டி.எம்.சி., தண்ணீர் போச்சு
துங்கபத்ரா ஷட்டர் உடைப்பால் 15 டி.எம்.சி., தண்ணீர் போச்சு
ADDED : ஆக 13, 2024 02:38 AM

பெங்களூரு: துங்கபத்ரா அணை ஷட்டர் உடைந்து, பெருமளவில் தண்ணீர் வெளியேறியதை அடுத்து, அனைத்து அணைகளின் திறனை ஆய்வு செய்ய வல்லுனர் கமிட்டி அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவின் கொப்பால் மாவட்டம், முனிராபாத்தில் துங்கபத்ரா அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 105.79 டி.எம்.சி., ஆகும். 32 மதகுகள் உள்ளன. தொடர் மழையால், 10ம் தேதி இரவு 8:00 மணி நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 104.70 டி.எம்.சி., ஆக இருந்தது.
அன்று இரவு 19வது மதகின் ஷட்டர், திடீரென உடைந்தது. இதனால் பெருமளவில் தண்ணீர் வெளியேறுகிறது. நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி, 13 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது. இந்த அளவு, இன்று 15 டி.எம்.சி.,யை தாண்டிவிடும்.
எதிர்க்கட்சிகள்
இந்த சம்பவம், மற்ற அணைகளின் திறன், பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன. அணைகளின் சூழ்நிலையை ஆய்வு செய்யும்படி, எதிர்க்கட்சியினரும், பொது மக்களும் வலியுறுத்துகின்றனர்.
சம்பவத்துக்கு பின் விழித்துக்கொண்ட அரசு, அனைத்து அணைகளின் திறனை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
விரைவில் பழுது
இது பற்றி பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமார், நேற்று அளித்த பேட்டி:
துங்கபத்ரா அணை கதவு உடைந்து, தண்ணீர் வெளியேறி பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே அணைகளின் திறனை ஆய்வு செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இன்னும் இரண்டு நாட்களில் கமிட்டி அமைக்கப்படும்.
இக்கமிட்டி, மாநிலத்தின் அனைத்து அணைகளுக்கும் சென்று, ஆய்வு செய்யும்.
துங்கபத்ரா அணைக்கு சென்றிருந்தேன். உடைந்த ஷட்டரை பழுது நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஒப்பந்ததாரர்களுடன் பேசியுள்ளேன்.
நான்கைந்து நாட்களில் சரிசெய்யப்படும். அணையை முதல்வர் சித்தராமையா, இன்று பார்வையிடுகிறார்.
ஏற்கனவே தொழில்நுட்ப குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம். யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 70 ஆண்டுகளில் முதன் முறையாக இப்படி நடந்துள்ளது.
தற்போதைக்கு அணையில் உள்ள நீரை தக்கவைக்க முயற்சிக்கிறோம். 55 முதல் 60 டி.எம்.சி., நீரை தக்க வைப்போம். துங்கபத்ரா அணை, அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதை நிர்வகிக்க தனி கமிட்டி உள்ளது.
நாங்கள் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமே. அணை எங்களிடம் உள்ளது; சாவி நிர்வாக கமிட்டியிடம் உள்ளது.
கே.ஆர்.எஸ்., அணைக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகிறார். அவருக்கு என்ன தெரியும்? அவருக்கு அரசியல் மட்டுமே செய்ய தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்., அரசுக்கு அபசகுனம்
துங்கபத்ரா அணையின் ஷட்டர் உடைந்திருப்பது, முதல்வர் சித்தராமையா அரசுக்கு அபசகுனத்தின் அறிகுறி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எதுவுமே சரியில்லை. முதலில், முழு நேர நீர்ப்பாசனத் துறை அமைச்சரை நியமிக்க வேண்டும். இப்போது இருக்கும் சிவகுமார், 'பார்ட் டைம்' தான். அரசியலுக்குத்தான் அவர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். நீர்ப்பாசனத்துறை அனாதையாக உள்ளது.
சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருப்பதால், தேர்தல் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருக்கும். துங்கபத்ரா அணை ஷட்டர் உடைந்து, தண்ணீர் வீணாகி ஆந்திரா, தெலுங்கானாவுக்கு செல்கிறது. நம் விவசாயிகள் கண்ணீர் விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளை நல்ல முறையில் நிர்வகிக்க வேண்டும். கதவு உடையாமல் பார்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. மாநில மக்கள் விடும் கண்ணீரின் சாபம், சித்தராமையா அரசை பாதிக்கும்.
-கோவிந்த் கார்ஜோள்,
எம்.பி., - பா.ஜ.,