ADDED : ஏப் 23, 2024 01:17 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியை சேர்ந்தவர் சம்பங்கி, 47, மாதாந்திர சீட்டு நடத்தி வருபவர். ஏப்., 19 இரவு வசூலான சீட்டு பணம், 16.40 லட்சம் ரூபாயை, பைக்கில் வைத்து, பொன்னை கூட்ரோட்டிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பெல் கூட்ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே, போலீஸ் சீருடையிலிருந்த நான்கு பேர், தேர்தல் பறக்கும் படை எனக்கூறி, அவரை சோதனையிட்டனர்.
அவரிடம் இருந்த பணத்தை பெற்று கொண்டு, உரிய ஆவணங்களை காண்பித்து, திங்கட்கிழமை, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறினர்.
அதை உண்மை என நம்பிய சம்பங்கி, பணம் பறிமுதல் செய்தது குறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து விசாரித்தார்.
அப்போது, அவரது பணம் ஒரு கும்பலால் பறிக்கப்பட்டதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தார். ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

