ADDED : மார் 04, 2025 03:10 AM
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், 18,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 43 சதவீதம் பேர், இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்துஉள்ளனர்.
இந்தியாவில் சாலை விபத்துகள், அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. விபத்துகளை குறைக்க, சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல் உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகள், அரசு சார்பில் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு, தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 18,007 பேர் இறந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இறந்தவர்கள் எண்ணிக்கை, 340 குறைந்துள்ளது. இது, சற்று ஆறுதலை தருகிறது.
குறைந்துள்ளது
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் எண்ணிக்கையை குறைக்க, போக்குவரத்து, காவல், சுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இதன் காரணமாக, கடந்த ஆண்டில் உயிரிழப்பு சற்று குறைந்துள்ளது. விபத்துகளை தவிர்க்க, சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதுடன், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம், சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சாலை விபத்தில் தினமும் சராசரியாக, 50 பேர் இறக்கின்றனர்.
இதை தவிர்க்க, மக்கள் அனைவரும் சாலை விதிகளை, கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சுய கட்டுப்பாடு அவசியம்.
40 சதவீதம்
கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், 18,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 43 சதவீதம் பேர், இருசக்கர வாகன விபத்துகளில் இறந்துஉள்ளனர்.
கார், ஜீப், வேன் போன்ற இலகு ரக வாகன வகை விபத்துகளில், 23 சதவீதம்; லாரி, கன்டெய்னர் போன்ற கனரக வாகன விபத்துகளில், 13 சதவீதம்; அரசு பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளில், 4.8 சதவீதம் பேரும் இறந்துஉள்ளனர்.
வரும், 2030ல், 30 முதல் 40 சதவீத வரையிலான உயிரிழப்புகளை குறைக்கும் வகையில், திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.