ADDED : ஏப் 18, 2024 07:55 PM
சென்னை:தட்டச்சு பயிற்சியில், 196 மையங்கள் அங்கீகாரம் பெறாமல் உள்ளதாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.
மாநிலம் முழுதும், 1,000த்துக்கும் மேற்பட்ட தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட வணிகவியல் பயிலகங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும், தமிழக உயர்கல்வி துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், 196 நிறுவனங்கள், 2022க்கு பிறகு அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அவற்றின் பட்டியல், https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள், சில குறைபாடுகளால் அங்கீகாரம் புதுப்பிக்காமல் செயல்படுகின்றன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்பட வேண்டாம் என்றும், உரிய முறையில் விண்ணப்பம் செய்து, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

