சி.வி.சண்முகத்துக்கு எதிரான மேலும் 2 வழக்குகள் ரத்து
சி.வி.சண்முகத்துக்கு எதிரான மேலும் 2 வழக்குகள் ரத்து
ADDED : ஆக 13, 2024 10:45 PM
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான மேலும் இரு வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் தலைமையில் போராட்டம் நடந்தது.
போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை என கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரில், சி.வி.சண்முகத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொரோனா விதிகளை மீறியதாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், தி.மு.க., பிரமுகர் அளித்த புகாரிலும் வழக்கு பதிவானது.
இரண்டு வழக்குகளும், விழுப்புரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன. இவற்றை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவில், 'போராட்டம் நடந்தபோது, கொரோனா விதிகள் அமலில் இல்லாததால், அவற்றை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; போராட்டத்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
'எட்டு மாதங்களுக்குப் பின் தி.மு.க., பிரமுகர் அளித்த புகாரில், இரண்டாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது' என்று கூறப்பட்டுள்ளது.
