பூ வியாபாரிக்கு மயக்க மருந்து கொடுத்து 20 பவுன் நகை திருட்டு: பெண் கைது
பூ வியாபாரிக்கு மயக்க மருந்து கொடுத்து 20 பவுன் நகை திருட்டு: பெண் கைது
ADDED : மே 09, 2024 11:39 PM

திருவாடானை: தொண்டியில் பூ வியாபாரிக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து 20 பவுன் நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அக்ராஹாரம் தெரு கோபால் மனைவி வசந்தம் 60. பாவோடி மைதானம் அருகே பூக்கடை வைத்துள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாகனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி 48. இவர் உப்பூரில் தெருவோரத்தில் இட்லி கடை நடத்துகிறார். இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பூக்கடைக்கு வந்த சிவகாமி இரவில் அவரது வீட்டில் தங்குவதாக வசந்தத்திடம் கூறினார். கடையை அடைத்து விட்டு இருவரும் வசந்தம் வீட்டிற்கு சென்றனர். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த போது சமையல் அறைக்கு சென்ற சிவகாமி காபியில் மயக்க மருந்தை போட்டு வசந்தத்திடம் கொடுத்தார்.
அதை குடித்த சிறிது நேரத்தில் வசந்தம் மயக்கமடைந்த நிலையில் அவர் கழுத்து, கைகளில் அணிந்திருந்த செயின், வளையல் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என 20 பவுன் தங்க நகை, ஒரு அலைபேசி, ரூ.1420 த்தை திருடிய சிவகாமி அங்கிருந்து தப்பினார். நேற்று காலை 6:00 மணிக்கு எழுந்த வசந்தம் நகை திருடு போனது தெரிந்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசாருக்கு பாராட்டு:
தொண்டி இன்ஸ்பெக்டர் இளவேனில் தலைமையிலான போலீசார் நாகனேந்தல் சென்று சிவகாமி வீட்டை சோதனை செய்தனர். அங்கு பீரோவில் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு சிவகாமியை கைது செய்தனர். புகார் தந்த இரண்டு மணி நேரமான 8:00 மணிக்குள் நகையை மீட்ட போலீசாரை மக்கள் பாராட்டினர்.