ADDED : மார் 29, 2024 09:30 PM
சென்னை:தமிழக மின்வாரியம், விவசாயத்திற்கு சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளில் மின் இணைப்பு வழங்குகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், வழித்தட செலவு என அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் இலவசம்; வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்.
நடப்பு, 2023 - 24ம் நிதியாண்டில், 50,000 மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. நாளையுடன் இந்த நிதியாண்டு முடிவடைய உள்ளது. இதுவரை, 20,000 இணைப்புகளே வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த டிசம்பரில் சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களிலும்; திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் எப்போதும் இல்லாத வகையில் அதீத கனமழை பெய்தது. வெள்ளப்பெருக்கால் அதிக மின் சாதனங்கள் சேதமடைந்தன.
எனவே, கையிருப்பில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்த சாதனங்களை சீரமைக்கும் பணிக்கு முடுக்கி விடப்பட்டது.
இதனால் தான், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. அடுத்த இரு மாதங்களில், எஞ்சிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

