ADDED : ஜூன் 28, 2024 02:13 AM
சென்னை: ''தமிழகத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன், 2,300 கோடி ரூபாயில், 202 துணைமின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டசபையில், தி.மு.க., - தாயகம் கவி கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் பல்வேறு எம்.எல்.ஏ.,க்கள், துணைமின் நிலையம் கேட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், 388 துணைமின் நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதில், 330 துணைமின் நிலையங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், 246 துணைமின் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிதாக, 20 சதவீத பங்களிப்புடன், மாநில அரசு 40 சதவீத பங்களிப்பில், துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கை கேட்டுள்ளது.
அதன்படி, 202 துணைமின் நிலையங்கள், 2,300 கோடி ரூபாயில் அமைக்க, மத்திய அரசுக்கு கருத்துரு வழங்கி உள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது.
அனுமதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும். அதுவரை அவசரத் தேவை இருந்தால், மாநில அரசு நிதியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

