ADDED : செப் 03, 2024 02:20 AM

சென்னை: ''தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை, 11,743 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் மட்டும், 205 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பின், அமைச்சர் அளித்த பேட்டி:
மழை பாதிப்புகளால் ஏற்படும் டெங்கு, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல், உண்ணிக்காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டில் இதுவரை, 11,743 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் தீவிரத்தால், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில், 205 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நோய்க்கு, 2012ம் ஆண்டில் 66 பேரும்; 2017ல், 65 பேரும் இறந்தது தான் அதிகபட்சம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், இந்தாண்டு டெங்கு இறப்புகள் குறைந்துள்ளன.
தமிழகத்தில், 4,676 மருத்துவமனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 11 துறைகளை சார்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள், டெங்கு குறித்த விழிப்புணர்வு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.