ADDED : மார் 28, 2024 02:08 AM
சென்னை:தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில், 21,722 பேர் காச நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காச நோயை முழுமையாக ஒழிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
2025க்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் பயனாக, காச நோய் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு மேம்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொருத் தவரை நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண் காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என, காச நோய் ஒழிப்பு திட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
காச நோயாளிகளுக்கு தேவைப்படும் பரிசோதனைகள், மருந்துகள்,களப் பணியாளர்கள் வாயிலாக வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. இதனால், நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுவோரில் 84 சதவீதம் பேர், முதல் சிகிச்சையிலேயே குணமடைந்து விடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில், நாடு முழுதும் 5.15 லட்சம் காச நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் 5496 பேர்; அரசு மருத்துவமனைகளில் 16,226 பேர் என, மொத்தம் 21,722 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.