ADDED : ஆக 15, 2024 07:34 PM
சென்னை:சட்டசபை தேர்தலுக்குள் பா.ம.க.,வை பலப்படுத்த, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், மகளிரணி செயலர் நியமிக்கப்படுவர் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க.,வின் கள செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தலா ஒரு தொகுதி செயலர், தலைவர் நியமிக்கப்படுவர் என, கடந்த 5ம் தேதி அறிவித்திருந்தார். மாவட்டச்செயலரும், தொகுதி செயலரும், தங்களின் செயல்பாடுகளில் ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல், கட்சி தலைமை கொடுக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்றும், அவர் கூறியிருந்தார்.
தொகுதி செயலர், தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட 7 குழுக்கள், தமிழகம் முழுதும் பயணம் செய்து வருகின்றன.
இந்நிலையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், மகளிரணிச்செயலர், தலைவரை நியமிக்க வேண்டும் என்று, ராமதாஸ் தற்போது கூறியுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர் மகளிரணிச்செயலர், தலைவரையும் தேர்வு செய்வார்கள்.
தொகுதி செயலர், தலைவர், மகளிரணி செயலர், தலைவர் தேர்வில் பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை, தேர்வுக் குழுக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.