ADDED : ஜூலை 25, 2024 12:37 AM
சென்னை:ஆரம்ப சுகாதார நிலையங்களில், விஷமுறிவு மருந்து இருப்பதை உறுதி செய்வதுடன், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை, நாய்க்கடியால், 2.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர்; பாம்புக் கடியால், 7,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 40 சதவீதத்துக்கும் மேலானோர் உயிரிழந்து இருக்கலாம் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பாம்புக்கடிக்கான எ.எஸ்.வி., விஷமுறிவு மருந்து, குறைந்தபட்சம் 10 குப்பிகள்; நாய்க்கடிக்கான ஏ.ஆர்.வி., மருந்து, 20 குப்பிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இம்மருந்துகளை, 24 மணி நேரமும் கையிருப்பில் வைத்திருப்பதுடன், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

