மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் 25 லட்சம் புகார்கள்; 5,200 தான் நிலுவை
மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் 25 லட்சம் புகார்கள்; 5,200 தான் நிலுவை
ADDED : மார் 28, 2024 11:42 PM
சென்னை:மின்னகம் நுகர்வோர் சேவை மையம் துவங்கியதில் இருந்து, மின்சாரம் தொடர்பாக இதுவரை பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, 25 லட்சத்தை எட்டியுள்ளது. அதில், 5,200 புகார்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன; மற்றவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், மின் தடை தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க, கணினி மையம், பிரிவு அலுவலக தொலைபேசி எண் உட்பட, 100க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை வழங்கியது.
அந்த எண்களை தொடர்பு கொண்ட போது, பலர் போனை எடுப்பதில்லை. இதனால், புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், 2021 ஜூன், 20ல் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் துவக்கப்பட்டது.
இங்கு புகார் அளிக்க, 94987 94987 என்ற மொபைல் போன் வெளியிடப்பட்டது. மின்தடை மட்டுமின்றி, கூடுதல் மின் கட்டண வசூல், மீட்டர் பழுது என, மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களும், 24 மணி நேரமும் பெறப்படுகின்றன.
முதல் முறையாக மின்னகத்தில் அளிக்கப்படும் புகார் கணினியில் பதிவு செய்யப்பட்டு, நுகர்வோருக்கு புகார் எண் எஸ்.எம்.எஸ்.,ல் அனுப்பப்படுகிறது.
இதனால், புகார் மீது உதவி பொறியாளர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கணினி மையம் துவங்கியதில் இருந்து தற்போது வரை, 25 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
அதில், கூடுதல் மின் கட்டண வசூல் உட்பட, 5,200 புகார்கள் மட்டும் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. மற்ற அனைத்து புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

