உண்ணி காய்ச்சலால் 2,639 பேர் பாதிப்பு 9 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு
உண்ணி காய்ச்சலால் 2,639 பேர் பாதிப்பு 9 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு
ADDED : ஜூலை 26, 2024 01:20 AM
சென்னை:“தமிழகத்தில் உண்ணி காய்ச்சலால், 2,639 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஒன்பது மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது,” என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, தி.நகரில், மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தற்போது, டெங்கு, எலிக்காய்ச்சல், உண்ணி காய்ச்சல், மஞ்சள் காமாலை, இன்புளுயன்சா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன.
சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு பரவலாக உள்ளது. இந்தாண்டில் இதுவரை டெங்குவால், 6,565 பேர் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்.
கடலுார், தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில், உண்ணி காய்ச்சல் பரவலாக உள்ளது. இதில், 2,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் உள்ளது; இதுவரை, 1,481 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மஞ்சள் காமாலை பாதிப்பு, சென்னை, திருச்சி, தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாக உள்ளது. இதனால், 1,750 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன், பன்றிக் காய்ச்சலால் 390 பேர்; 'ரேபிஸ்' நோயால், 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில், மூன்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அங்கு உடனடியாக மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தற்போது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தினசரி 2,972 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். கொசு ஒழிப்பு பணியில் மாநிலம் முழுதும், 22,384 பேர் ஈடுபட்டு உள்ளனர்.
அவசர உதவிக்கு 104, 108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கேரளாவில், மூன்று பேர் 'நிபா' வைரசால் உயிரிழந்ததால், தமிழக எல்லை பகுதியான நடுங்கனி, சோழடி, தளுர், நம்பியார்குன்னு, பட்டாவயல் போன்ற ஐந்து இடங்களில் நிரந்தர மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பயணியரை பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன காய்ச்சல் இது?
'ஸ்கிரப் டைபஸ்' என்ற இந்த நோய் தொற்று வகையைச் சேர்ந்தது. ஒட்டுண்ணியில் காணப்படும், 'ஓரியன்ட்டா சுட்சுகாமுஷி' என்ற பாக்டீரியாவால் உருவாகிறது.
கால்நடைகளின் மீது காணப்படும் ஒரு வகை வண்டு, உடலின் சதையோடு ஒட்டி அமர்ந்து, கால்நடைகளின் ரத்தத்தை உறிஞ்சும். கால்நடையின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு, பால் மடிகள் வீங்கும். உடல் முழுதும் அரிப்பு ஏற்பட்டு, ரத்தம் கசியும். காய்ச்சல் ஏற்படும்.
இந்த வகை உண்ணிகளைக் கொண்ட கால்நடைகளுடன் பழகும்போதோ, உண்ணி உதிர்ந்த தரையில், நாம் அமர்ந்தோ, படுத்தோ அல்லது கை வைத்தோ இருந்தால் அந்த உண்ணியில் காணப்படும் பாக்டீரியா நம் மீதும் ஒட்டி, உடலில் கொப்புளங்கள், அரிப்பு, காய்ச்சல், மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு உண்ணி, ரத்தத்தையே உறிஞ்சத் துவங்கும்.
பெரும்பாலானோருக்கு இந்த உண்ணி தானாகவே உதிர்ந்து விடும். இல்லையெனில், 'ட்வீசர்' என்ற சிறு வகை கிடுக்கியைக் கொண்டு உண்ணியை நீக்கலாம். பாதிப்பு துவங்கும்போது மருத்துவரை நாடி, சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

