28,859 புகார்களுக்கு தீர்வு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
28,859 புகார்களுக்கு தீர்வு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
ADDED : ஏப் 28, 2024 12:48 AM
சென்னை: சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக, ஆறு ஆண்டுகளில், 28,859 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துஉள்ளது.
மாசு கட்டுப்பாடு வாரிய செயல்பாடுகள் குறித்து, சி.ஏ.ஜி., எனப்படும், நுகர்வோர் செயல்பாட்டு குழு வெளியிட்டு உள்ள அறிக்கை:
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்கின்றனர், 2017 - 2022 வரையிலான, ஆறு ஆண்டுகளில் பெறப்பட்ட புகார்கள், அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள் வாயிலாக கேட்கப்பட்டன. இந்த மனுக்களுக்கு வாரியம் அளித்த பதில்களை தொகுத்து இருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள, 38 சுற்றுச்சூழல் பொறியாளர்அலுவலகங்கள் வாயிலாக, 29,605 புகார்கள் பெறப்பட்டன. இதில், 28,859 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 746 புகார்கள் நிலுவையில் உள்ளன. தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பதில், பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தான் இதற்கு காரணம்.
சென்னை, மறைமலை நகர், நாகர்கோவில் பகுதிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளன. இதற்கு அடுத்த இடங்களை, அம்பத்துார், சேலம், துாத்துக்குடி நகரங்கள் பிடித்து உள்ளன. தேனி, ராமநாதபுரம், ஊட்டி ஆகிய பொறியாளர் அலுவலகங்களில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே புகார்கள் வந்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

