அரசு விரைவு பேருந்துகளில் 29,000 இருக்கைகள் நிரம்பின தீபாவளி முன்பதிவு
அரசு விரைவு பேருந்துகளில் 29,000 இருக்கைகள் நிரம்பின தீபாவளி முன்பதிவு
ADDED : செப் 04, 2024 11:59 PM
சென்னை:அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து, இதுவரை, 29,000க்கும் மேற்பட்ட இருக்கைகள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,100க்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர், டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
வரும் அக்., 31ம் தேதி வியாழன் அன்று, தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு துவங்கியுள்ளது. அக்., 29ம் தேதி செல்ல 9,500க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துஉள்ளனர்.
சென்னையில் இருந்து செல்ல, 7,200க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அக்., 30 தேதியும் 7,900க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 130க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களில் முன்பதிவு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளன. பயணியரின் தேவைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும். பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டி.என்.எஸ்.டி.சி., செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தவிர, கோயம்பேடு உள்ளிட்ட மையங்களிலும் முன்பதிவு செய்யலாம். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்கள் இருக்கும்போதே, 29,000க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு முடிந்துள்ளன.
இவ்வாறு கூறினர்.