பாலாற்றில் புதிதாக 3 தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்
பாலாற்றில் புதிதாக 3 தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்
ADDED : மார் 11, 2025 12:51 AM

வேலுார் : “பாலாற்றில் இந்தாண்டு மூன்று புதிய தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன,” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பத்தில், குடியாத்தம் மோர்தானா அணை இடதுபுற கால்வாய், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவை துவக்கி வைத்து, அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
பாலாற்றில் கவசம்பட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அந்த நீர் காவனுார் வரையில் செல்லும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஆண்டு முழுதும் நீர் கிடைக்கும். இந்தாண்டு பாலாற்றில் புதிதாக மூன்று தடுப்பணை கட்டப்பட உள்ளது.
இதுமட்டுமல்ல, தமிழகத்தில் அனைத்து குளம் மற்றும் ஏரிகளையும் பராமரிப்பது தான் என் வேலை. பேர்ணாம்பட்டு, பத்தரப்பள்ளி அணை கட்டும் திட்டம் வழக்கில் உள்ளதால், திட்டம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது; அதையும் கட்டுவோம்.
என்னை பொறுத்தவரை நான் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, 40 அணைகளை கட்டியுள்ளேன். எந்த ஊருக்கு போனாலும், என் பெயரை சொல்வர்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.