ADDED : மார் 24, 2024 11:17 PM
வேலுார் : கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் சுதேஷ், 41; இவர், சென்னை மற்றும் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பணியாற்றுபவர் ராகுல், 30. இரு நாட்களுக்கு முன், 300 கிராம் தங்கக்கட்டி, 16 கிராம் தங்க காசு என, 316 கிராம் தங்கத்துடன், திருச்சூரிலிருந்து சென்னையிலுள்ள நகைக்கடைக்கு, ராகுல் பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
ரயிலில் போலீஸ் எனக்கூறி வந்த இருவர், ராகுலை சோதனையிட்டு, அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த தங்கத்தை எடுத்தனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள போது, ஆவணமின்றி தங்கத்தை எப்படி எடுத்து வரலாம் என, கேள்வி எழுப்பினர். பின், விசாரணை நடத்த வேண்டும் என, காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ராகுலுடன் இறங்கினர். அவரது மொபைல் போனை வாங்கிக் கொண்டு, அங்கேயே இருக்குமாறு கூறிச் சென்றனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்த ராகுல், அவ்வழியாக சென்னை சென்ற மற்றொரு ரயிலில் ஏறி, சென்னை சென்று, தங்கம் பறிபோனது குறித்து சுதேஷிடம் கூறினார். காட்பாடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

