தி.மு.க.,வினரின் "சரித்திரத்தை' எழுதும் போலீசார்:உயரதிகாரிகளுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு
தி.மு.க.,வினரின் "சரித்திரத்தை' எழுதும் போலீசார்:உயரதிகாரிகளுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு
ADDED : செப் 19, 2011 12:01 AM
கோவை:நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., பிரமுகர்கள், 'சரித்திரத்தில்' இடம் பெற்றுவிட்டனர்.
இவர்களைப் பற்றிய, 'சரித்திரப் பதிவேடு' (ஹிஸ்ட்ரி ஷீட்) எழுதி, ரகசியமாகக் கண்காணிக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நில அபகரிப்பு தொடர்பாக, கோவை மாவட்டத்தில் 383, ஈரோடில் 859, நீலகிரியில் 121, திருப்பூரில் 479, சேலத்தில் 994, நாமக்கலில் 1,174, தர்மபுரியில் 694 மற்றும் கிருஷ்ணகிரியில் 845 புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளன. எட்டு மாவட்டங்களிலும் மொத்தம் 1,202 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப் பிரிவு போலீசார் 196 வழக்குகள் பதிவு செய்து, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 177 பேரை கைது செய்துள்ளனர்; 169 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் மாவட்ட தி.மு.க., செயலருமான பழனிச்சாமி, தன் மீதான நில மோசடி வழக்கில் கைதாகாமல் தவிர்க்க, ஐகோர்ட்டில் முன் ஜாமின் பெற்றுள்ளார்.'சரித்திரத்தில்' இடம்: நில அபகரிப்பில் ஈடுபட்டோருக்கும், ரவுடியிசத்தில் ஈடுபட்டோருக்கும், 'ஹிஸ்ட்ரி ஷீட்' (சரித்திரப் பதிவேடு) தயாரிக்குமாறு, நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப் பிரிவு போலீசாருக்கு மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குற்றவாளிகளைப் பற்றிய சரித்திரப் பதிவேடுகள் மூன்று விதமாக தயாரிக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரையிலான நிலத்தை அபகரித்தவர்களுக்கான பதிவேடு 'ஏ பிளஸ்' என்றும், ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நிலத்தை அபகரித்தவர்களுக்கான பதிவேடு 'ஏ பிளஸ், பிளஸ்' என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, ரவுடித்தன செயலில் ஈடுபட்டோருக்கு தனியாகவும் சரித்திரப் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள நபர்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவர்' என்றார்.
திருப்பூர் முதலிடம்:நில அபகரிப்பில், திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோவையில் 249 கோடி ரூபாய், ஈரோடில் 123 கோடி ரூபாய், நீலகிரியில் 18 கோடி ரூபாய், திருப்பூரில் 294 கோடி ரூபாய், சேலத்தில் 178 கோடி ரூபாய், நாமக்கலில் 188 கோடி ரூபாய், தர்மபுரியில் 48 கோடி ரூபாய், கிருஷ்ணகிரியில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அத்துமீறியும், மிரட்டியும் அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.