ADDED : மே 21, 2024 05:24 AM
சென்னை : டில்லியில் நடந்த, தேசிய அளவிலான திறன் போட்டிகளில், தமிழக மாணவர்கள், 40 பதக்கங்கள் வென்று மூன்றாமிடம் பெற்றனர்.
இந்திய திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், டில்லியில், 'இந்தியா ஸ்கில்ஸ் - 2024' போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 60க்கும் மேற்பட்ட துறைகளில், நவீன தொழில்நுட்பம் சார்ந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
'மொபைல் ரோபோடிக்ஸ், பேஷன் டெக்னாலஜி' மற்றும் தகவல் தொழில்நுட்பம் உட்பட, பல்வேறு துறைகளில் போட்டிகள் நடந்தன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், 'நான் முதல்வன்' திட்டம் ஆகியவற்றின் வழியே, திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற, 86 மாணவர்கள் தமிழகம் சார்பில் பங்கேற்றனர். இவர்கள் ஆறு தங்கம், எட்டு வெள்ளி, ஒன்பது வெண்கலம், 17 திறன் மிகுந்தவர்களுக்கான பதக்கம் என, 40 பதக்கங்களை வென்றனர்.
பதக்க பட்டியலில் ஒடிசா முதலிடம், கர்நாடகம் இரண்டாமிடம், தமிழகம் மூன்றாம் இடம் பெற்றது. போட்டியாளர்கள் எண்ணிக்கையில், தமிழகம் முதலிடம் வகித்தது.
கைவினைப் பொருட்கள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் வரை, பல்வேறு துறைகளில் தமிழக மாணவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய திறன் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றவர்கள், பிரான்ஸ் நாட்டில் செப்டம்பர் மாதம் நடக்கும், உலக திறன் போட்டியில் பங்கேற்பர் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

