திடக்கழிவு கிடங்குகளை கண்காணிக்க ரூ.4 கோடியில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
திடக்கழிவு கிடங்குகளை கண்காணிக்க ரூ.4 கோடியில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
ADDED : ஜூலை 11, 2024 11:22 PM
சென்னை:திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் கிடங்குகளில் முறைகேடுகளை தடுக்க, செயற்கை நுண்ணறிவு எனப்படும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மைக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
முறைகேடு
இருப்பினும், பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் தங் கள் பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம் கிடைக்கா ததே காரணம்.
இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங் களின் குப்பைக்கிடங்குகளில், விதிகளுக்கு புறம்பாக ரசாயனக் கழிவுகள் கொட்டப்படுவதாக அவ்வப் போது புகார் வருகிறது.
மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ரசாயன கழிவுகளை கொட்டுவது, ஆலை கழிவுகளை கொட்டி எரிப்பது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தீ விபத்து
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளில், முறைகேடுகளை தடுக்க வேண்டும். இதில், உயிருக்கு ஆபத்தான வாயுக்கள் வெளியேறுவதையும், தீ விபத்துகள் ஏற்படுவதையும் தடுக்க, புதிய வழிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.
இந்த வளாகங்களை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக, 'தெர்மல் கேமரா'க்கள், விஷ வாயு, 'சென்சார்'கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நவீன சாதனங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி, புதுக்கோட்டை மாநகராட்சியின் திருக்கட்டளை ஆகிய இடங்களில், 4 கோடி ரூபாயில் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் நிறுவப்பட உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

