பல்லடத்தில் 4 பேர் படுகொலை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
பல்லடத்தில் 4 பேர் படுகொலை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 16, 2024 04:57 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம், கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 45. இவரது தாய் புஷ்பவதி, 67, அத்தை ரத்தினம்மாள், 58, பெரியப்பா மகன் செந்தில்குமார், 47, ஆகியோர் கடந்தாண்டு செப்., 3ம் தேதி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர்.
மோகன்ராஜின் தோட்டத்தில், நெல்லையை சேர்ந்த ராஜ்குமார், 27 என்பவர் தன் நண்பர்களுடன் மது அருந்தியதை தட்டிக்கேட்டதை தொடர்ந்து, ஆத்திரத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி, பொதுமக்கள் போராட்டங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கொலையில் தொடர்புடைய நெல்லையை சேர்ந்த ராஜ்குமார், 27, அவரது சகோதரர் வெங்கடேஷ், 29, அவர்களது தந்தை அய்யப்பன், 52, தேனியை சேர்ந்த சோனை முத்தையா, 30, திருச்சியை சேர்ந்த செல்லமுத்து, 24, ஆகிய ஐந்து பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைது செய்த போது, தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், ராஜ்குமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். கைதான ஐந்து பேரும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கில், ஐந்து பேர் மீது, 800 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணை துவங்கியது; ஒரு வாரத்தில், 51 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
வழக்கில் குற்றவாளிகளான ராஜ்குமார், சோனை முத்தையா, செல்லமுத்து, அய்யப்பன் ஆகியோருக்கு, நான்கு கொலைகளுக்கு தனித்தனியே நான்கு ஆயுள் தண்டனைகள் விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நேற்று நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார். வெங்கடேஷுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

