கட்டட கள ஆய்வை சரிபார்க்க 4 மாதம் கெடு: பதிவுத்துறை உத்தரவு
கட்டட கள ஆய்வை சரிபார்க்க 4 மாதம் கெடு: பதிவுத்துறை உத்தரவு
ADDED : மே 16, 2024 02:47 AM
சென்னை:சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டட மதிப்பு கள ஆய்வு செய்ததை, மேலதிகாரிகள் சரிபார்க்கும் பணிகளை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு: சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்படும் கட்டட மதிப்புகளை கள ஆய்வு வாயிலாக, சார் பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், சார் பதிவாளர்கள் அளிக்கும் கள ஆய்வு அறிக்கைகளை, மாவட்ட பதிவாளர், உதவி ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,க்கள் சரிபார்க்க வேண்டும்.
இதுபோன்ற சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்காமல், பல அதிகாரிகள் கிடப்பில் போடுவதாக புகார்கள் வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நிகழ்வில், இது தொடர்பான கோப்புகளை, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, கட்டட கள ஆய்வு விபரங்களை, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள், நான்கு மாதங்களுக்குள் சரிபார்ப்பு செய்து முடிக்க வேண்டும். டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.