கணவரை வழியனுப்பி திரும்பிய போது விபத்து மனைவி, 2 மகன்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி
கணவரை வழியனுப்பி திரும்பிய போது விபத்து மனைவி, 2 மகன்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி
ADDED : மே 16, 2024 01:52 AM

மதுராந்தகம்:கணவரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி விட்டு, வீடு திரும்பிய போது நடந்த கோர விபத்தில், மனைவி, இரு மகன்கள் மற்றும் டிரைவர் என, நான்கு பேர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷமீது, 50. இவரது மனைவி ஜெய்நிஷா பேகம், 42. மகன்கள், மிஷால், 20, பைசல், 14, அப்ஜல் அலி, 16.
விசா கிடைத்தது
சவூதி அரேபியாவில் பணிபுரிய அப்துல் ஷமீதுக்கு, சமீபத்தில் விசா கிடைத்தது. இதையடுத்து, அப்துல் ஷமீதுவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க, அவரது குடும்பத்தினர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர்.
அப்துல் ஷமீதுவை வழியனுப்பிய பின், 'மாருதி பிரீஸா' காரில், கடலுாருக்கு மீண்டும் திரும்பினர். காரை சரவணன், 45, என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் அருகே கார் சென்ற போது, சென்னையில் இருந்து கேரளாவுக்கு, இரும்பு கம்பிகள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஜெய்நிஷா பேகம், மகன்கள் மிஷால், பைசல், கார் டிரைவர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியாகினர்.
அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், விபத்துக்குள்ளான காரில் கிடந்த நான்கு சடலங்களையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் தலைமறைவு
பலத்த காயம் அடைந்த சிறுவன் அப்ஜல் அலி, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெய்நிஷா பேகத்தின் அண்ணன் முகமது ஷாலிக், 67, அளித்த புகாரில் வழக்கு பதிந்த மதுராந்தகம் போலீசார், தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.