ADDED : ஜூலை 07, 2024 03:38 AM
கடலுார்: கடலுாரில் பா.ம.க., பிரமுகரை கொல்ல முயன்றவர்களை கைது செய்ய, 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்.பி.,அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார், சூரப்பநாயக்கன்சாவடியை சேர்ந்தவர் சிவசங்கர். பா.ம.க., பிரமுகர். இவர், நேற்று வீட்டில் இருந்த போது, 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்ய முயன்றது.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சிவசங்கர் தனது தம்பி பிரபு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளார்.அதனால், பிரபு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் தரப்பை சேர்ந்த சதீஷ், வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர், சிவசங்கரை வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியான தங்கபாண்டியன், தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் கடந்த மாதம் 8ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.