ஓசூர் விமான நிலையம் அமைக்க கிருஷ்ணகிரியில் 4 இடம் தேர்வு
ஓசூர் விமான நிலையம் அமைக்க கிருஷ்ணகிரியில் 4 இடம் தேர்வு
ADDED : ஜூலை 28, 2024 12:20 AM
சென்னை:ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களை, தமிழக அரசின், 'டிட்கோ' தேர்வு செய்துள்ள நிலையில், சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து வழங்க, விமான நிலையங்களின் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
தற்போது, மின் வாகன உற்பத்தி மையமாக ஓசூர் உருவெடுத்து வருகிறது. எனவே, முதலீட்டாளர்கள் வந்து செல்லவும், சரக்குகளை விரைந்து கையாளவும், ஓசூரில் சர்வதேச பசுமை விமான நிலையத்தை, 2,000 ஏக்கரில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் வெளியிட்டார்.
தமிழகத்தில் விமான நிலையம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, டிட்கோ எனப்படும், தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.
எனவே, ஓசூரில் விமான நிலையம் அமைக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களை, 'டிட்கோ' தேர்வு செய்துள்ளது.
அந்த விபரங்கள், இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திடம் வழங்கப்பட்டு, விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து தருமாறு வலியுறுத்தப்பட்டது. அதை ஆணையம் ஏற்றுள்ளது.
நான்கு இடங்களை ஆய்வு செய்து, அதிக வாய்ப்புள்ள ஒரு இடத்தை, டிட்கோவுக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.
அதை தமிழக அரசிடம் தெரிவித்து, விமான நிலையம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட பணிகளை டிட்கோ மேற்கொள்ளும். தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு இடங்களில், தனியார் விமான ஓடுபாதை அமைந்துள்ள இடங்களும் இருப்பதால், அது தொடர்பாக அரசு பேச்சு நடத்தி வருகிறது.

