40,000 மாணவர்கள் 'ஆப்சென்ட்' வீடு தேடி சென்று விசாரிக்க உத்தரவு
40,000 மாணவர்கள் 'ஆப்சென்ட்' வீடு தேடி சென்று விசாரிக்க உத்தரவு
ADDED : மே 02, 2024 02:07 AM
சென்னை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 'ஆப்சென்ட்' ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்து உள்ளது.
வரும், 6ம் தேதி பிளஸ் 2 வுக்கும், 10ம் தேதி - 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி - பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்வுகளில், பிளஸ் 2வில், 12,000 பேர், பிளஸ் 1ல், 9,500 பேர், 10ம் வகுப்பில், 17,000 பேர் தேர்வில் பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
இந்த மாணவர்கள் படிப்பை கைவிட்டு விடாத வகையில், அவர்களை துணை தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டுமென, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியானதும், துணை தேர்வு தேதி அறிவிக்கப் படும்.
ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பங்கேற்காத மாணவர்களும், இந்த துணை தேர்வில் பங்கேற்று, அடுத்து உயர்கல்வியில் சேர வழி வகை செய்ய வேண்டும்.
இதற்காக, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் பெற்றோரை சந்தித்து, உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

