முல்லைப் பெரியாறு அணையில் 41.4 மி.மீ., மழை பெய்தது: நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
முல்லைப் பெரியாறு அணையில் 41.4 மி.மீ., மழை பெய்தது: நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 16, 2024 02:15 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் 41.4 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1308 கன அடியாக அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 41.4 மி.மீ., தேக்கடியில் 24 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு 990 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1308 கன அடியாக அதிகரித்தது.
தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1078 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2835 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் சற்று உயர்ந்து 121.05 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).
நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 97 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

