UPDATED : பிப் 27, 2025 04:28 AM
ADDED : பிப் 27, 2025 02:52 AM

சென்னை: ''தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க, வரும் மார்ச் 5ல், தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி பங்கேற்காது,'' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்தால், தமிழகம் எட்டு தொகுதிகளை இழக்கும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, இது குறித்து விவாதிக்க, வரும் மார்ச் 5ல், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, தமிழகத்தில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சீமான் அளித்த பேட்டி:
மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதி மறுவரையறை என்பது, இன்று ஏற்பட்ட பிரச்னை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே, இதுபற்றி பேசியிருக்கிறேன். இதற்காக பல போராட்டங்களை தனித்து நின்று, நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை பிரச்னையில், தி.மு.க., அரசின் கருத்தை, நாங்கள் நம்ப போவதில்லை. நீண்ட காலமாக நம்பி நம்பி ஏமாந்து விட்டோம். அதனால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி தனித்து தான் போராடும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.