ADDED : ஜூலை 12, 2024 02:47 AM
சென்னை:பிரதமர் சூரியசக்தி மின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4841வீடுகளில் 20 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரியில் துவக்கப்பட்ட இத்திட்டத்தில் 1 கிலோ வாட் திறனில் மின் நிலையம் அமைக்க 30,000 ரூபாய்; 2 கிலோ வாட்டிற்கு 60,000 ரூபாய்; அதற்கு மேல் அமைத்தால் 78,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் மின் நிலையம் அமைக்க மத்திய மின் துறை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் பிரதமரின் திட்டத்தின் கீழ் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க 40,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 30 வரை 4841 வீடுகளில் 1 கி.வாட், 2, 3, 4 கி.வாட் என பல்வேறு திறன்களில் ஒட்டுமொத்தமாக 20 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

