ADDED : மார் 21, 2024 08:39 AM
சென்னை:தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமான நிலையில், கோடை மழையும் துவங்கியுள்ளது. திருக்குவளையில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் இம்மாதம், 1ம் தேதி துவங்கியது. அப்போது முதல், பெரும்பாலான மாவட்டங்களில், வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெயில் அதிகரித்தது போல, கோடை மழையும் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக திருக்குவளையில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. தலைஞாயிறு, 4; வேதாரண்யம், 3; கோடியக்கரை, மீமிசல், திருத்துறைப்பூண்டி தலா, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
வரும் நாட்களுக்கான நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று மிதமான மழை பெய்யும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்
* தென் மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும், 23 முதல், 27ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

