இணைப்பு தாமதத்தை தவிர்க்க 5 லட்சம் ஒருமுனை மீட்டர்கள்
இணைப்பு தாமதத்தை தவிர்க்க 5 லட்சம் ஒருமுனை மீட்டர்கள்
ADDED : மே 25, 2024 08:29 PM
சென்னை:தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளுக்கு ஒரு முனை, மும்முனை என, இரு பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன.
சென்னை உட்பட பல இடங்களில், ஒரு முனை மின் இணைப்பிற்கான மீட்டருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், புதிய மின் இணைப்பு வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. எனவே, 8 லட்சம் ஒருமுனை மீட்டர்கள் வாங்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு, சமீபத்தில் ஆர்டர்கள் வழங்கப்பட்டன. இதுவரை, 3 லட்சம் மீட்டர்கள் பெறப்பட்டு, பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், 2 லட்சம் மீட்டர்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே உள்ள மின் இணைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் அதிகமாக குறைபாடு உடைய மீட்டர்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த மீட்டர்களை மாற்றி விட்டு, புதிய மீட்டர்களை பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து, இன்னும் 2 லட்சம் மீட்டர்கள் வர வேண்டியுள்ளது. அவையும் விரைவில் பெறப்பட்டு, அலுவலகங்களுக்கு வினியோகம் செய்யப்படும். எனவே, எந்த அலுவலகத்திலும் மீட்டர் இல்லை என்ற காரணத்தை கூறி, மின் இணைப்பு வழங்க தாமதிக்க கூடாது என, பொறியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.