ADDED : செப் 08, 2024 05:32 AM
வானுார்: வானுார் அருகே அளவுக்கு அதிகமாக ஜல்லி, கிரஷர் பவுடர் ஏற்றிச் சென்ற 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வானுார் அடுத்த திருவக்கரை குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஜல்லி மற்றும் கிரஷர் பவுடர் ஏற்றிச் செல்வதாக புகார் எழுந்தது.
அதனையொட்டி திண்டிவனம் வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், ஆண்டியார்பாளையம் சோதனைச் சாவடி அருகே சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கிளியனுார் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில், அளவுக்கு அதிகமாக ஜல்லி, கிரஷர் பவுடர்கள் ஏற்றிச்சென்ற 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.