ADDED : ஆக 31, 2024 01:47 AM
ராமநாதபுரம்:-வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும், இரண்டாவது மனைவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி வெர்ஜின்வெஸ்டா உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் அருகே குயவன்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து என்ற சங்கர் 37, இவருக்கு ரம்யா 26 என்ற மனைவி, ஒரு மகள் உள்ளனர்.
2012ல் திருமணத்தின் போது 15 பவுன் நகையும், 20 ஆயிரம் ரொக்கப்பணமும், 50 ஆயிரம் பண்டபாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கினர். மாரிமுத்து தனது தந்தை குமார் 55, தாய் அஞ்சம்மாள் 51, ஆகியோர் பேச்சை கேட்டு கூடுதல் வரதட்சணை கேட்டு ரம்யாவை தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மேட்டுக்காரர் கிழக்குத்தெருவை சோர்ந்த மணிமேகலையை 34, மாரிமுத்து இரண்டாம் திருமணம் செய்தார். இது குறித்து ரம்யா 2017 மே 3 ல் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
மாரிமுத்து, தந்தை குமார், தாய் அஞ்சம்மாள் 2வது மனைவி மணிமேகலை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும், மணிமேகலைக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி வெர்ஜின்வெஸ்டா உத்தரவிட்டார். குமார், அஞ்சம்மாள் விடுதலை செய்யப்பட்டனர்.