ADDED : ஜூலை 10, 2024 01:46 AM
சென்னை:சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலை, ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது தயாரிக்கப்பட்டு வரும், வந்தே பாரத் ரயில்கள், பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதுவரை, 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் தயாரிப்பு வரிசையில், இரவு நேரத்தில் பயணிக்க வசதியாக, சிலீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை இயக்கி பரிசோதிக்கப்படுகிறது.
இதையடுத்து, சிலீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, 50 சிலீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த ரயில், 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். சில ரயில்களில், 24 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இந்த ரயிலின் வடிவமைப்பு பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது. தயாரிப்பு பணியை, 2025- - 26-ல் துவக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.