சி.ஐ.எஸ்.எப்.,புக்கு 50,000 பேர் தேர்வு: தலைமை இயக்குநர் தகவல்
சி.ஐ.எஸ்.எப்.,புக்கு 50,000 பேர் தேர்வு: தலைமை இயக்குநர் தகவல்
ADDED : மார் 07, 2025 12:51 AM

சென்னை:சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் ராஜ்விந்தர் சிங் அளித்த பேட்டி:
சி.ஐ.எஸ்.எப்.,பில், 'சைபர்' பாதுகாப்பு, 'டேட்டா' அறிவியல், விமான பாதுகாப்பு, ஆயுதங்கள் மற்றும் உத்திகள், ட்ரோன் எதிர்ப்பு தீர்வுகள் உள்ளிட்ட பிரிவுகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக தேர்வு செய்யப்படும் நிபுணர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்குவர்.
இதன் வாயிலாக, சிறந்த பாதுகாப்பு வழங்க முடியும். இப்படையில் பெண் வீரர்கள் அதிகளவில் பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போது, 8 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஹரியானாவில் அனைத்து மகளிர் சி.ஐ.எஸ்.எப்., படைப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.எஸ்.எப்., 56வது நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜாதித்யா சோழன் மண்டல தலைமையகத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வருகிறார்; காணொளி காட்சி வாயிலாக, 'சைக்கிளத்தான்' பேரணியை துவக்கி வைக்கிறார்.
மேலும், 2 லட்சம் வீரர்களுடன் உள்ள சி.ஐ.எஸ்.எப்., படை வாயிலாக, நாடு முழுதும், 359 முக்கிய இடங்களில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
அடுத்து வரும் ஆண்டுகளில், 50,000 வீரர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். 10 ஆண்டுகள் பணிக்கு பின், அவர்கள் விரும்பும் இடங்களுக்கு மாற்றப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.