ADDED : ஏப் 24, 2024 02:32 AM
சென்னை:தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய அனல் மின் கழகம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்திய அணு மின் கழகம் ஆகிய மத்திய அரசின் நிறுவனங்களுக்கு, அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 7,171 மெகா வாட் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினமும், 5,000 - 5,500 மெகா வாட் தான் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப, 1,000 மெகா வாட் திறனுள்ள ஓர் அணு உலையில், கடந்த ஜனவரியில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், வல்லுார்; கடலுார் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி நிறுவன அனல் மின் நிலையங்களில் முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படவில்லை.
இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, 4,500 மெகா வாட் வரை வழங்கப்பட்டது. கடந்த 16ம் தேதி கூடங்குளத்தில், 1,000 மெகா வாட் உற்பத்தி துவங்கியது.
அங்கிருந்து தமிழகத்திற்கு ஏற்கனவே, 550 மெகா வாட் வழங்கும் நிலையில், கூடுதலாக அதே அளவு மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தற்போது தமிழகத்திற்கு தினமும், 5,200 மெகா வாட் வரை வழங்கப்படுகிறது.

