ADDED : ஏப் 10, 2024 09:55 PM
சென்னை:தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்த, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளில், 55 சதவீதம் பேர் நேற்று முன்தினம் வரை ஓட்டளித்துள்ளனர்.
தமிழகத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரில், வீட்டில் இருந்து ஓட்டளிப்பவர்கள், விண்ணப்பம் அளிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி வீட்டிலிருந்தபடி ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 82,666 பேர்; மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 50,665 பேர் விண்ணப்பம் அளித்தனர். அவர்களின் வீடுகளுக்கு சென்று, தபால் ஓட்டு பெறும் பணி தற்போது தமிழகம் முழுதும் நடந்து வருகிறது.
ஓட்டுச்சாவடி அலுவலர், போலீசார், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களிடம் தபால் ஓட்டுகளை வழங்கி, அவர்கள் ரகசியமாக ஓட்டை பதிவு செய்து, தாங்கள் கொண்டு செல்லும் பெட்டியில் தபால் ஓட்டை போட வைக்கின்றனர்.
நேற்று முன்தினம் வரை, மொத்த வாக்காளர்கள், 1,33,339 பேரில், 70,258 பேர் ஓட்டளித்துள்ளனர். தபால் ஓட்டுகளை பெறும் பணி, வரும் 18ம் தேதி வரை நடக்கும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
தபால் ஓட்டளிப்போருக்கு, பணம் கொடுக்கப்பட்டதாக, புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

