நீதிபதிகளை குற்றம் சாட்டியவருக்கு 6 மாதம் சிறை: ஐகோர்ட் உத்தரவு
நீதிபதிகளை குற்றம் சாட்டியவருக்கு 6 மாதம் சிறை: ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 14, 2024 02:18 AM
சென்னை:நீதிமன்றத்தில் உரத்த குரலில் பேசி, நீதிபதிகளை குற்றம் சாட்டிய நபருக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கை சேர்ந்தவர் வெங்கடேசன்; உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறி, முகநுால் கணக்கில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, வெங்கடேசனுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெங்கடேசன், நீதிபதிகள் முன் ஆஜரானார். உரத்த குரலில் பேசி, நீதிமன்றம் பின்பற்றும் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகள் குறித்தும் மோசமாக பேசினார். எந்த உத்தரவையும் பிறப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். வழக்கறிஞர்கள், ஊழியர்கள் இருக்கும் நீதிமன்ற அறையில், நீதிபதிகளை குற்றம் சாட்டி உரத்த குரல் எழுப்பியது, சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நீதி நிர்வாகத்தில் குறுக்கிட்டதால், நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக முடிவெடுத்து, வெங்கடேசனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தில் இருந்த அவரை கைது செய்து, புழல் சிறையில் அதிகாரிகள் முன் ஆஜர்படுத்த, உயர் நீதிமன்ற போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

