ADDED : மே 29, 2024 12:34 AM
சென்னை:தமிழகத்தில் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 63.63 லட்சம் வீடுகளுக்கு, 2,010 கோடி ரூபாய் செலவில், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊரக பகுதிகளில் சமத்துவத்தை ஏற்படுத்த, ஊரக வளர்ச்சித் துறையின் புதிய முயற்சியாக, ஒன்பது மாவட்டங்களில், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில், 20 கோடி ரூபாயில், 10 எரிவாயு தகன மேடைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2021 மே 7 முதல் பிப்., 14 வரை, 2.97 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3 கோடி ரூபாய், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும் 2,106 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், 26,920 பணிகள் எடுக்கப்பட்டு, 16,247 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், ஒரு எம்.பி.,க்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிதியில் 6,097 பணிகள் எடுக்கப்பட்டு, 3,128 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டுக்குள் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மூன்று ஆண்டுகளில் கிராமப்புறங்களில், 63.63 லட்சம் வீடுகளுக்கு, 2,010.29 கோடி ரூபாயில், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
மூன்று ஆண்டுகளில், 6.40 லட்சம் உறுப்பினர்களுடன், 58,746 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 2.56 லட்சம் மகளிர் குழுக்களுக்கு, 71,960.43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.