ADDED : பிப் 23, 2025 07:11 AM

கூடலுார் : தமிழக வனச்சட்டம் மற்றும் வன பாதுகாப்பு குறித்து இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாமில், 68 இளம் நீதிபதிகள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில், மாநில நீதித்துறை பயிற்சி மையம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழக வன பாதுகாப்பு, வன குற்றங்கள், சட்டங்கள் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
முகாமுக்கு ஓய்வு பெற்ற தமிழக முதன்மை மற்றும் தலைமை வன பாதுகாவலர் சஞ்சய் ஸ்ரீவத்சவா தலைமை வகித்து, வன பாதுகாப்பு, தமிழ்நாடு வனச் சட்டங்கள் குறித்தும், களைச் செடிகளால் வனப்பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விளக்கினார். முகாமில், நீதித்துறை பயிற்சி மையத்தின் இயக்குனர் சத்தியா, கூடுதல் இயக்குனர் குமரேசன், இணை இயக்குனர் செந்தில்குமார் ராஜவேல், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர்கள் சிவக்குமார், மேகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து நேரடி கள பயிற்சி அளித்தனர். இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று நிறைவு பெறுகிறது.

