ADDED : மே 20, 2024 12:48 AM
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் தேரோட்டம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
நேற்றுமுன்தினம் மாலை நடந்த இக்கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் சுவாமிக்கு மாலை போடுவது தொடர்பாக பழைய வத்தலக்குண்டு, கட்ட காமன்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிரச்னை செய்தவர்களை அப்புறப்படுத்திய பின் தேரோட்டம் மீண்டும் நடந்தது.
அதன் பின் பழைய வத்தலக்குண்டு மேற்குத் தெரு,இந்திரா காலனி பகுதிக்குள் மர்ம கும்பல் கல் வீசியதில் வீடுகள் சேதமடைந்தது. இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் 14 வயது உடைய 3 சிறுவர்கள், மகதிராம் 25, ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது. இவர்கள் உள்ளிட்ட சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி., பிரதீப் ஆய்வு செய்தார். கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் உட்பட 12 பேரை போலீசார் தேடுகின்றனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

