'கரும்பு விவசாயி' சின்னத்தில் 7,125 ஓட்டு நா.த.க.,வுக்கு அதிர்ச்சி அளித்த சுயேட்சை
'கரும்பு விவசாயி' சின்னத்தில் 7,125 ஓட்டு நா.த.க.,வுக்கு அதிர்ச்சி அளித்த சுயேட்சை
ADDED : ஜூன் 06, 2024 02:49 AM
திருப்பூர்:திருப்பூர் சட்டசபை தொகுதியில், 'கரும்பு விவசாயி' சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர், 7,125 ஓட்டுகளை பெற்றிருப்பது, நாம் தமிழர் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
முன்னதாக நடந்த தேர்தலில் தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னம், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இம்முறை, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றது. இதனால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வழங்கப்பட்டது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் சந்திரசேகர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அவர் தன் மனுவை வாபஸ் பெற்றார். 'நாம் தமிழர் கட்சியினரின் ஓட்டுகளை பிரிக்க எனக்கு மனமில்லை; எனவே, மனுவை வாபஸ் பெறுகிறேன்' என வெளிப்படையாக கூறியிருந்தார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், பொதுப்பட்டியலுக்குள் வந்தது. சுயே., வேட்பாளராக மனு தாக்கல் செய்த வேலுசாமி என்பவருக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டது.
'இச்சின்னம் பெற்றதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை; இயல்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது' என, வேட்பாளர் வேலுசாமி கூறியிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில், அந்த வேட்பாளர், 7,125 ஓட்டுகளை பெற்றிருக்கிறார். இது, நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

