ADDED : செப் 04, 2024 02:00 AM
சென்னை: சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவ கல்லுாரிகளும், திருநெல்வேலியில் ஓமியோபதி மருத்துவ கல்லுாரியும், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லுாரியும் இயங்குகின்றன.
மேலும், 30 தனியார் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இவற்றில், பி.எஸ்.எம்.எஸ்., -- பி.ஏ.எம்.எஸ்., -- பி.யு.எம்.எஸ்., -- பி.எச்.எம்.எஸ்., போன்ற படிப்புகள் உள்ளன. இதற்கு, www.tnhealth.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, ஆக., 4 முதல் 27 வரை 7,350 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.
அரசு கல்லுாரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீடுக்கு 50 இடங்களும், மாநில அரசுக்கு 280 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. தனியார் கல்லுாரிகளின் 1,980 இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்படுகின்றன. மீதமுள்ள இடங்கள் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடாக உள்ளன.
விரைவில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, அடுத்த மாதம் கவுன்சிலிங் நடத்த, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.