7,360 கவுரவ விரிவுரையாளர்கள் நடப்பாண்டும் தொடர அனுமதி
7,360 கவுரவ விரிவுரையாளர்கள் நடப்பாண்டும் தொடர அனுமதி
ADDED : ஜூலை 30, 2024 01:46 AM
சென்னை : தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் 7,360 பேர், நடப்பு கல்வியாண்டிலும் தொடர, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் முற்பகலில் பாடங்கள் நடத்த, 5,699 கவுரவ விரிவுரையாளர்கள், 20,000 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், கடந்த மார்ச் வரை பணியாற்ற நியமிக்கப்பட்டனர். அதன்பின் அவர்களின் மாத ஊதியம், 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு, 746 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்தது.
ஆனால், இன்னும் அப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இந்நிலையில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட, 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில், 2025 மார்ச் வரை தற்காலிகமாக தொடர அனுமதிக்கும்படி, கல்லுாரி கல்வி இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
அதை ஏற்ற அரசு, கவுரவ விரிவுரையாளர்கள் 5,699 பேர் தொடர, அனுமதி அளித்துள்ளது. இதற்காக, 156.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கல்லுாரிகளில் பிற்பகலில் பாடப்பிரிவுகளை நடத்த நியமிக்கப்பட்ட, 1,661 கவுரவ விரிவுரையாளர்களும், 11 மாதங்களுக்கு தற்காலிகமாக தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு செலவினமாக, 45.67 கோடி ரூபாய்; ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, 46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, உயர்கல்வித்துறை செயலர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ளார்.

