ரூ.78 கோடி மானியம் தரும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிப்பு
ரூ.78 கோடி மானியம் தரும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிப்பு
ADDED : ஜூன் 15, 2024 01:14 AM
சென்னை:டெல்டா மாவட்டங்களில், 78.67 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார்.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை:
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லை. அதனால், டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும், டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக, 78.67 கோடி ரூபாய் மதிப்பில், குறுவை சாகுபடி தொகுப்பை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 டன் நெல் விதைகள் மானிய விலையில், 3.85 கோடி ரூபாய் மதிப்பில், வேளாண் விரிவாக்க மையங்கள் வழியாக வழங்கப்படும்.
நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக, ஏக்கருக்கு 4,000 ரூபாய் வீதம், 1 லட்சம் ஏக்கர் பரப்புக்கு, அரசு 40 கோடி ரூபாய் வழங்கும்.
நுாண்ணுாட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணுாட்ட கலவை, 50 சதவீத மானியத்தில் வினியோகிக்க, 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்த, ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், 25,000 ஏக்கர் பரப்பளவுக்கு 62.50 லட்சம் ரூபாய்; 25,000 ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்த, ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம், 62.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
பயறு வகை பயிர்களை, 10,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள், இலை வழி உரம் தெளிக்க 1.20 கோடி ரூபாய்; பயறு வகை பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க, 50 சதவீத மானியத்தில், 10,000 ஏக்கருக்கு நுண்ணுாட்டச் சத்து வழங்க, 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
வேளாண்மை பொறியியல் துறை வழியாக, விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, சாகுபடி கலப்பை, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் உள்ளிட்ட 442 கருவிகள் வழங்க, மானியமாக 7.52 கோடி ரூபாய் வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பை ஈடு செய்ய, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க, 24.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு, 78.67 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

