ADDED : ஜூன் 15, 2024 04:43 AM

கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருபுவனை: திருபுவனை அருகே 7ம் வகுப்பு மாணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த வடுகுப்பத்தை சேர்ந்தவர் பூரணி,35; திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் 13 ஆண்டிற்கு முன் குருவிநத்தத்தை சேர்ந்த அருண்,34; என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பூரணி தனது மூன்றாவது மகன் விக்னேஷ் மற்றும் அருணுடன் சென்று சென்னை, கூடப்பாக்கத்தில் 12 ஆண்டாக குடும்பம் நடத்தி வந்தார். விக்னேஷ் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன் பூரணி மற்றும் விக்னேஷை புதுச்சேரிக்கு அழைத்து வந்த அருண், நல்லவாடு கிராமத்தில் வீடு வாடகை எடுத்து இருவரையும் தங்க வைத்துவிட்டு தலைமறைவானார். எங்கு தேடியும் அருண் கிடைக்கவில்லை.
அதனையொட்டி பூரணி வீட்டை காலி செய்துவிட்டு ஒன்றரை மாதத்திற்கு முன் உறவினர் உதவியுடன் புதுச்சேரி, திருபுவனை சீனிவாசா நகர், 5வது குறுக்குத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பூரணி வேலைக்கு சென்றுவிட்டு மாலை 4:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, விக்னேஷ், வீட்டின் கூரையில் துாக்கு போட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்த திருபுவனை போலீசார், விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விக்னேஷ் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

